நூறு நாள் வேலை உறுதி திட்டத்தில் முறையாக வேலை வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டத்தில் திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யூனியனுக்கு உட்பட்ட கிழவிப்பட்டி ஊராட்சியில் உள்ள செண்பகபேரி மற்றும் துரைசாமிபுரம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் தலைமையில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் முறையாக வேலை வழங்க வலியுறுத்தி கோஷமிட்டவாறு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் யூனியன் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதேபோல் தோழப்பண்பண்ணை கிராமத்தில் பணிபுரியும், 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சின்னத்துரை அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பணி முறையாக கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.


