புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை இரத்து செய்ய வலியுறுத்தி மாணவிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் இயற்பியல் முதுகலை ஆசிரியர் தியாகராஜன் என்பவர்மீது தொடுக்கப்பட்ட வழக்கு பொய்யானது எனவும் தங்களது ஆசிரியர் குற்றமற்றவர் எனவும் கூறி சஸ்பென்ட் உத்தரவை இரத்து செய்ய வேண்டுமென அப்பள்ளி மாணவ மாணவிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 13.10.2025 அன்று இப்பள்ளியில் படிக்கும் வேளாண்பிரிவு மாணவ மாணவியர்களை இயற்பியல் முதுகலை ஆசிரியர் க. தியாகராஜன் என்பவரும் ஆங்கில முதுகலை ஆசிரியர் ஐஸ்வர்யா என்பவரும் சென்னமரெட்டிபட்டி கிராமத்திற்கு கள ஆய்விற்காக அழைத்துச் சென்ற போது அங்கு ஆசிரியர் தியாகராஜன் சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அப் புகார் மீது தலைமையாசிரியர் அன்னை ஷீபா பிளவர் லைட் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறி ஆசிரியர் தியாகராஜன் மற்றும் தலைமையாசிரியர் மீதும் பள்ளிக் கல்வித்துறையால் சஸ்பென்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இயற்பியல் ஆசிரியர் தியாகராஜனை கைது செய்யும் பொருட்டு அதிரடிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக ஆசிரியர் தியாகராஜன் குற்றமற்றவர் எனவும் பள்ளியில் பணிபுரியும் சில ஆசிரியர்களின் தூண்டுதலினால் தான் பொய்ப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை ரத்து செய்ய வேண்டுமெனவும், மாணவிகளில் சிலர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


