நாசரேத்தில் சிமெண்டு கலவை எந்திரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கிளாக்குளத்தை சேர்ந்தவர் சுடலைமணி. இவரது மனைவி ராணி (50). தொழிலாளி. இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகன் திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் திருமணமாகி குடும்பத்தினருடன் சேலத்தில் வசித்து வருகிறார். மூத்த மகள் திருமணமாகி கணவர் இறந்துவிட்டார்.
இரண்டாவது மகளுக்கு கடந்த 3-ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பட்டு கட்டும் வைபவம் நடைபெற்றது. ராணி வழக்கமாக கான்கிரீட் போடும் வேலைக்கு சென்று வந்தார். வழக்கம்போல் நேற்று நாசரேத் – பிரகாசபுரம் மெயின் ரோட்டில் நடைபெற்று வரும் தரைப்பாலம் கட்டுமான பணிக்கு நேற்று கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது. நேற்று மாலையில் ராணி அங்கு வேலை பார்த்து கொண்டிருந்தபோது, அவருடைய சேலை சிமெண்டு கலக்கும் எந்திரத்தில் எதிர்பாராதவிதமாக சிக்கியுள்ளது.
கண்இமைக்கும் நேரத்தில் சேலையுடன் ராணியும் எந்திரத்தில் சிக்கியுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் எந்திரத்தில் பலத்த காயத்துடன் சிக்கியிருந்த அவரை மீட்டு நாசரேத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்கு பதிவு செய்து, அவரது உடலை கைப்பற்றி சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் வனசுந்தர் குறித்து விசாரித்து வருகிறார். இச்சம்பவம் நாசரேத் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


