தமிழகத்தில் எஸ்ஐஆர் இப்போது தேவையில்லை. ஒரே மாதத்தில் இதை செய்து முடிப்பது என்பது சாத்தியம் இல்லாதது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வபெருந்தகை கூறினார்.
தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி.யை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எஸ்ஐஆர் இப்போது தேவையில்லை. ஒரே மாதத்தில் இதை செய்து முடிப்பது என்பது சாத்தியம் இல்லாதது. இவர்கள் கொடுக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது கடினமானது.
2002இல் எவ்வாறு விவரங்களை நிரப்பி கொடுத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. எனவே, தேர்தல் முடிந்த பிறகு இதை செய்தால் எந்தப் பிரச்னையும் இருக்காது. அவசர அவசரமாக செய்யும்போது, தகுதியானவர்களுக்கு வாக்குகளை இல்லாமல் செய்வதும், தகுதியற்றவர்களுக்கு வாக்குகளை வழங்குவதுமாக அமைந்துவிடும். இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.
வாக்குரிமை என்பது மக்களுடைய அடிப்படை உரிமை. அந்த உரிமையை முடக்குவதும் கேள்விக்குறியாக்குவதும், எதிர்க்கட்சிகளை எல்லாம் இதை சரிபாருங்கள் என்று தேர்தல் பணி செய்யவிடாமல் திசை திருப்புவதும் சரியல்ல.
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு, மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். உளவுத்துறை முற்றிலும் செயலிழந்துள்ளது. ஏதாவது ஒரு மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தால் அந்த அரசை பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்லும் பாஜக, இதற்கு ஏன் பொறுப்பேற்க தயங்குகிறது.
பிகார் தேர்தலில் கருத்து திணிப்பு செய்துள்ளார்கள். பிகார் மக்கள் நல்ல தீர்ப்பு அளித்திருக்கிறார்கள். அது வாக்கு எண்ணிக்கையின்போது தெரியவரும் என்றார். பேட்டியின் போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), ரூபி ஆர்.மனோகரன் (நான்குனேரி) ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆய்வுக் கூட்டம் ஒத்திவைப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுத் தலைவரும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கு. செல்வபெருந்தகை தலைமையில் நேற்று புதன்கிழமை வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், பேரவை குழுவுடன் வந்திருந்த தமிழக அரசின் இணைச் செயலர் ரமேஷ், திடீர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.


