தூத்துக்குடியில் செயற்கை நீரூற்று மின்விளக்கு அலங்காரத்துடன் புதுப்பொலிவுடன் தெப்பக்குளம் பூங்கா விரைவில் திறக்கப்பட்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில், சுந்தரபாண்டிய விநாயகர் ஆலயத்தின் முன்பாக அமைந்துள்ள தெப்பக்குளம், நகரின் முக்கியமான பொழுதுபோக்கு மற்றும் ஆன்மிகக் கட்டுமானங்களில் ஒன்றாகும். இங்கு விழாக்காலங்களில் நடைபெறும் தெப்ப உற்சவம் பெரும் திரளான பக்தர்களை ஈர்த்துவருகிறது.
இந்த தெப்பக்குளத்தை மேலும் அழகுபடுத்தி, பொதுமக்கள் நலனுக்காக நடைபயிற்சி மேடை மற்றும் பூங்கா அமைக்கும் பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக சுமார் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தெப்பக்குளம் முழுவதும் தூர்வாரப்பட்டு, நான்கு திசைகளிலும் செயற்கை நீரூற்றுகள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்கவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் வசதியான பூங்கா மற்றும் நடைமேடைகள் உருவாக்கப்படுகின்றன.
இந்தப் பணிகள் எவ்வாறு முன்னேறுகின்றன என்பதைக் காண, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார். பணிகளின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், அவை விரைவில் முடிக்கப்படுமாறு உத்தரவிட்டார். ஆய்வின் போது, சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், தொமுச மின்வாரிய சங்க தலைவர் பேச்சிமுத்து, மேயர் நேர்முக உதவியாளர் ஜாஸ்பர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


