தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் நாளை திட்டமிட்டபடி முதற்கட்ட தேர்தல் நாளை நடக்கிறது என்று திருமண்டல நிர்வாகி நீதிபதி ஜோதிமணி தெரிவித்தார்.
நாசரேத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல நிர்வாகியாக பொறுப்பேற்று, கடந்த செப்டம்பர் 3-ந் தேதி அன்று விட்ட இடத்திலிருந்து தேர்தல்களை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கடந்த மாதம் 27-ந் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை தனது உத்தரவில் கூறியுள்ளது.
அதேபோல் கோர்ட்டில் மறு விசாரணை தேதியான அடுத்த மாதம் 3-ந் தேதி வரை தற்பொழுது உள்ள நிர்வாகம் தொடரும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதைக்கருத்தில் கொண்டு, புதிய தேர்தல் அட்டவணையின்படி, முதற்கட்டமாக திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபைமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திட்டமிட்டபடி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியும், தேர்தல் அதிகாரியுமான ரெத்தினராஜ், ஜான் ஆர்.டி. சந்தோஷம், நிதி ஆலோசகர் அன்பர் தாஸ் மற்றும் மேலாளர் காபிரியல் தேவா ஆகியோர் உடன் இருந்தனர்.


