தூத்துக்குடி சிவன் கோவில், ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற, சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு திருவிழா, இன்று (புதன்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் உட்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் 10 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்திற்கு மஞ்சள், சந்தனம், மா பொடி, திரவியம், இளநீர், பால், தயிர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பூஜைகளை கோவில் பிரதான பட்டர்கள் செல்வம் சுப்பிரமணியன் சண்முகம் ஆகியோர் நடத்தினர்.
விழாவில் கோவில் இணை ஆணையர் அன்புமணி, செயல அலுவலர் தமிழ்ச்செல்வி, தொழில் அதிபர் கேஏபி சீனிவாசன், அறங்காவலர்கள் செந்தில்குமார், கந்தசாமி, பிஎஸ்கே ஆறுமுகம் சாந்தி, ஜெயலட்சுமி, மந்திர மூர்த்தி, முன்னாள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாரியப்பன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் அம்மன் பித்தளை சப்பரம், கிளி வாகனம், அன்னபட்சி வாகனம், சிம்மவாகனம், வெள்ளி மயில் வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், கமல வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா நடைபெறும். வருகிற 13ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். வரும் 14ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7:00 மணிக்கு பாகம்பிரியாள் அம்மன் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பூப்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 15ம் தேதி சனிக்கிழமை இரவு 8:00 மணிக்கு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும். விழா நாட்களில் கலை நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


