தூத்துக்குடியில் சாலையில் மழைநீரோடு கழிவுநீர் கலந்து தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட முருகன் தியேட்டர் to பாக்கியநாதன்விளை வரையிலான தாளமுத்துநகர் பிரதான சாலை தற்போது பெய்த கனமழையின் காரணமாக பழுதடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு மிகப்பெரிய தடையை ஏற்படுத்தி வருகிறது. இதில் பள்ளி மாணவ மாணவியர்கள் இவ்விடத்தை கடந்து செல்ல மரணபயத்தை உருவாக்கி வருகிறது.
இதில் பழைய முருகன் தியேட்டர் முன் ராஜீவ் நகர் சந்திப்பில் மழையின் போது தேங்கிய மழை நீர் வெளியேற வழியின்றி சாலையின் பள்ளத்தாக்கில் தேங்கி கிடந்தது. இது சார்ந்த பிரச்சனையை பொதுமக்கள் சார்பாக மேயரின் கவனத்திற்கு புகாராக தெரிவித்தவுடன் மாநகராட்சி வாகனம் மூலமாக தேங்கியுள்ள மழை நீரை அப்புரப்படுத்தினார்கள். ஆனாலும் அப்புறப்படுத்திய மறு நொடியில் இவ்விடத்தில் பாதாள சாக்கடை கால்வாய் சேனல் வழியாக கழிவு நீர் வெளியேறி அதே இடத்தில் மீண்டும் குளம் போல் அசுத்த தண்ணீர் நிரந்தரமாக தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மழை நீரும் கழிவு நீரும் கலந்து சாலையின் நடுவே நிரந்தரமாக தேங்கி கிடப்பதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அவலம் உருவாகியுள்ளது. ஆகவே பொதுமக்கள் நலன் கருதியும், இச்சாலையை அதிகமாக பயன்படுத்தி வரும் மாணவ மாணவியர்களின் உடல் நிலையை மனதில் கொண்டும் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


