துப்பாஸ்பட்டியில் குளங்களைச் சுற்றியுள்ள கரைகளில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக விதைகள் நடப்பட்டது.
தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மண்ணின் ஈரப்பதம் போதுமான அளவில் உள்ளது. இது பனை விதைகள் நடவு செய்ய சிறந்த தருணமாக இருக்கும். மண் அரிப்பைத் தடுப்பதிலும், நிலத்தடி நீராதாரத்தைப் பாதுகாப்பதிலும் சிறந்த இடம் பிடிப்பதுடன், அடி முதல் நுனி வரை மனிதர்களுக்கு பயன்படக்கூடியதாக உள்ள பனை மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
பொன் முட்டையிடும் வாத்தை அறுப்பது போல பனை மரங்கள் வெட்டப்பட்டு செங்கல் சூளைகளில் எரிபொருளாக்கப்பட்டு வருகிறது. எனவே தமிழ் நாட்டின் மரமான பனை மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் அரசும் பல திட்டங்களை வகுத்து வருகிறது. கடந்த காலங்களில் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளின் கரைகளில் தன்னார்வலர்கள் மூலம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
பல இடங்களில் தற்போது அந்த பனை மரங்கள் துளிர்த்து வளர்ந்து வருகிறது. மேலும் இப்போது குளங்களில் பனை மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஆண்டு ஆண்டுதோறும் பனை விதைகள் நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக கீழ அரசடி ஊராட்சிக்கு உட்பட்ட துப்பாஸ்பட்டி சிற்றூரில் அமைந்துள்ள குளங்களைச் சுற்றியுள்ள கரைகளில் விதைகள் நடப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மா. மு. தமிழ் நேயன் ஒருங்கிணைப்பில் சுற்றுச்சூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் சு அன்னலட்சுமி மண்டல செயலாளர் இ.மாரிமுத்து மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதி மாநில மாவட்ட பாசறை பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


