கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் தாரகாசூரன் சம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி, வள்ளி தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று சூரபத்மனின் தம்பி தாரகாசூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி நேற்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பகல் 11.30 மணியளவில் சூரபத்மனின் தம்பியான தாரகாசூரனை வதம் செய்வதற்கு முன்னர் வீரபாகு தேவரை முருகப்பெருமான் பேச்சுவார்த்தைக்காக அனுப்புகிறார்.
3 முறை தூது சென்ற வீரபாகு தேவரிடம் தாரகாசூரன் அடிபணியவில்லை. இதனால் கோபம் கொண்ட முருகப்பெருமான் கோவில் மேலவாசல் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் போர்க்களத்திற்கு வருகிறார். அங்கு தன்னை எதிர்த்து நின்ற தாரகாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த தாரகாசூரன் சம்ஹார நிகழ்வு கழுகுமலை திருத்தலத்தில் மட்டுமே நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று சூரசம்ஹாரம்
இன்று (திங்கள் கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. மாலை 4.30 மணியளவில் சுவாமி வீரவேல் ஏந்தி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி போர்க்களத்திற்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணியளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும்.
நாளை திருக்கல்யாணம்
நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணியளவில் சுவாமி வெள்ளமயில் வாகனத்திலும், வள்ளி தெய்வானை பூச்சப்பரத்திலும் வீதிஉா சென்று தபசு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். நாளைமறுநாள் (புதன்கிழமை) இரவு 7 மணியளவில் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், வருகிற 31-ஆம் தேதி பட்டின் பிரவேசம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அடுத்த மாதம்(நவம்பர்) 1-ஆம் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது.


