தூத்துக்குடியில் மதுகுடிக்க பணம் தரமறுத்தவரின் செல்பாேனை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி பூபாலராயபுரத்தை சேர்ந்த குருசாமி மகன் ரவிக்குமார் (45). தொழிலாளி. இவர் வேலைக்கு செல்வதற்காக முத்தையாபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், அவரிடம் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி உள்ளார்.
எங்கள் பகுதியில் வேலை பார்த்தால், எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று அவரை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து மொபைல் போனில் போலீசாருக்கு அவர் புகார் தெரிவிக்க முயன்றுள்ளார். இதில ஆத்திரமடைந்த அவர்கள், மொபல் போனை பிடுங்கி, கீழேபோட்டு உடைத்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு கொலைமிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரிடம் மதுகுடிக்க பணம் கேட்டு மிரட்டியவர்கள் முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்த செல்வம் மகன் முகேஷ் (25), முத்தையாபுரம் திருமாஞ்சிநகர் ஆரோக்யராஜ் மகன் அந்தோணி ராஜ் (22), ராமர் மகன் சதீஷ்குமார் ஆகியோர் என தெரிய வந்தது. உடனடியாக அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் முகேஷ் பழைய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.


