தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்ட சாலையோர கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று பழைய பேருந்து நிலையம் அருகே சிலர் சாலையோர கடைகள் அமைத்தனர். இதையறிந்த மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்துமாறு கூறினர். இதனால் மாநகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த மத்தியபாகம் போலீசார் சாலையோர கடைகளை வைக்க அனுமதி இல்லை என்று கூறி கடைகளை அப்புறப்படுத்துமாறு கூறினர். இதனால் சாலையோர வியாபாரிகள் வேதனை அடைந்தனர். இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறும்போது, தீபாவளிக்காக 3 நாட்கள் கடை வைக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி மறுக்கிறது. ஆனால், ஆண்டு முழுவதும் சிலர் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வருகிறார்கள். இதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று வேதனையுடன் கூறினர்.


