தூத்துக்குடி கதிர்வேல் நகர் பகுதியில் மர்ம நபர் நடமாட்டம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி கதிர்வேல் நகர் முதல் தெருவில் வசித்து வரும் பாலமுருகேசன் என்பவரது வீட்டில்இன்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் முகம் தெரியாத ஒருவர் பக்கத்து வீட்டின் வழியாக அவரது வீட்டின் மொட்டைமாடிக்கு ஏறி குதித்து சந்தேகத்திற்கிடமான வகையில் அவரது வீட்டில் உலா வந்து காலை 6.00 மணியளவில் அந்த மர்ம நபர் மொட்டைமாடியில் இருந்து இறங்கி சென்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்கள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து பாலமுருகேசன் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், போலீசார் முறையாக இரவு நேர பாதுகாப்பு பணியை மேற்கொள்ளாத காரணத்தினால் இது போல் சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும், இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அச்சத்துடன் தூங்க கூடிய சூழ்நிலை உள்ளதாகவும், இது குறித்து காவல் துறையிடம் அளித்த புகாருக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இதேபோல் தொடர் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினர்.


