கயத்தாறு அருகே வாலிபர் கலைக்கொள்ளி மருந்தை குடித்து தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள பணிக்கர் குளம்பஞ்சாயத்தை சேர்ந்த இரண்டாம்புலி ராமநாதபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து, விவசாயி. இவரது மகன் மாரிமுத்து (21). இவர் சங்கர்நகர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். தற்போது இவர் தந்தையுடன் விவசாயம் செய்து வந்தார்.
இவர் அடிக்கடி தலைவலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தாராம். இதற்கு சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் பயிர்களுக்கு அடிக்க வைத்திருந்த கலைக்கொள்ளி மருந்தை குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். சிறிது நேரத்திலேயே அவர் வீட்டிற்குள் மயங்கி விழுந்துள்ளார்.
பதறிப்போன குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


