தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் துரைசிங் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் சூர்யா (22). இவர் மீன்பிடி தொழில் மற்றும் ஸ்வீட் ஸ்டாலில் கூலி வேலையும் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் சூர்யாவை 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு சூர்யா வெள்ளப்பட்டி அருகே காட்டுப்பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தாளமுத்துநகர் கணபதி நகரைச் சேர்ந்த முருகன் மகன் உத்திரகண்ணன் (22), சுனாமி காலனியை சேர்ந்த மகேந்திரன் என்ற செல்வம் (21) மற்றும் இசக்கிமுத்து, மாரிமுத்து சூர்யா ஆகியோர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் உத்திரகண்ணன், மகேந்திரன் என்ற செல்வம் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உத்திரகண்ணனின் சகோதரி திருமணம் நடந்து உள்ளது. இந்த விழாவுக்கு வந்த சூர்யா, உத்திரகண்ணனின் உறவுக்கார பெண்களிடம் தகாத முறையில் பேசினாராம். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 12-ந் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது, சூர்யா, உத்திரகண்ணனை தாக்கினாராம்.
இதைத் தொடர்ந்து உத்திரக்கண்ணன், சமாதானம் பேசுவது போன்று தனது நண்பர்கள் மூலம் சூர்யாவை சம்பவ இடத்துக்கு அழைத்து சென்று பேசி உள்ளார். அங்கு மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த உத்திரக்கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் சூர்யாவை குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.


