தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி பிஎம்டி காலனி 8வது தெருவைச் சேர்ந்தவர் சங்கிலிமாடன் மகன் அபிலாஷ் (22), கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் மகன் சுந்தர் (28). இவர்கள் இருவரும் நண்பர்கள், நேற்று இரவு வேலை முடித்துவிட்டு இருவரும் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். பைக்கை சுந்தர் ஓட்ட அபிலாஷ் பின்னால் அமர்ந்திருந்தார்.
தூத்துக்குடி- பாளை., ரோடு மில்லர்புரம் பகுதியில் உள்ள ஓட்டல் அடுத்து உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக பைக்கில் திரும்ப முயன்றபோது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதில் தலையில் அடிபட்டு அபிலாஷ் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சுந்தர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், விளாத்திகுளம் சிதம்பர நகரைச் சேரந்த முனியசாமி மகன் சுப்பையா (34) என்பவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் லாரியுடன் சரணடைந்தார். பின்னர் அவர் தென்பாகம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


