தூத்துக்குடியில் நடைபெற்ற பல்கலைக்கழக அளவிலான கூடைப்பந்து போட்டியில் வ.உ.சி கல்லூரி அணி முதல் இடம் பிடித்தது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் நடந்தது. போட்டியில் பல்வேறு கல்லூரி அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அணி முதல் இடத்தையும், கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டிவிளை தூயயோவான் கல்லூரி அணி 2-வது இடத்தையும், நாகர்கோவில் தூய ஜெரோம் கல்லூரி அணி 3-வது இடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு வ.உ.சி கல்லூரி முதல்வர் வீரபாகு தலைமை தாங்கினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் ஆறுமுகம், ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கூடைப்பந்து கழக பொருளாளர் பாலமுருகன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் சிவஞானம் செய்து இருந்தார்.


