ஆந்திராவில் வழங்குவது போல், தமிழகத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கணேஷ் மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், “தமிழகத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மற்றும் சரக்கு வாகன ஆட்டோ ஓட்டுநர்கள் தொழில் செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு கடந்த 15 ஆண்டு காலமாக மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது.
மேலும பன்னாட்டு நிறுவனங்களான ஓலா, உபர், ராபிட்டோ போன்றவைகளின் காரணத்தால் அவர்கள் தொழில் மிகவும் நலிவடைந்து குடும்பங்கள் வறுமையில் வாழுகின்றது. ஆந்திரா அரசாங்கம் ஆண்டுக்கு ஒரு முறை “ஆட்டோ டிரைவர் சேவை” என்ற திட்டத்தின் மூலமாக 15,000 ரூபாய் வழங்குகிறார்கள். அதே போன்று தமிழகத்திலும் ஒவ்வொரு ஆட்டோ டிரைவர் குடும்பத்திற்கும் 15,000 நிதி உதவி வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


