நாசரேத் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள மணத்தி மேல தெருவை சேர்ந்தவர் அம்மாசி மகன் கந்தசாமி (47) இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவியும் 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். கந்தசாமிக்கும் அவரது மனைவி ஹேமலதாவிற்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த கந்தசாமி சம்பவத்தன்று நாசரேத் அருகே உள்ள இடையன்விளையில் உள்ள தோட்டத்தில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். மாலை வரை கந்தசாமி வீட்டிற்கு வராததால் அவரைத் தேடி இடையன்விளையில் உள்ள தோட்டத்திற்கு சென்று பார்க்கும் போது அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
உடனே அவரை ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக கந்தசாமி உயிரிழந்தார். இது குறித்து நாசரேத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


