கயத்தாறு அருகே கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள அகிலாண்டபுரத்தை சேர்ந்த வீரபெருமாள் மகன் குருசாமி (35). தொழிலாளி. திருமணமாகாதவர். இவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் இருந்து குளிப்பதற்காக கிராமத்திற்கு அருகில் உள்ள கல்குவாரியில் குளிக்க சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.
அதேசமயம் குருசாமியின் டிரஸ் வேஷ்டி, சட்டை மற்றும் செருப்பு ஆகியவை வெளியே கிடந்தன. இதை பார்த்து உறவினர்கள் துணிகளை கழற்றி வைத்துவிட்டு குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் கயத்தாறு போலீசாருக்கு புகார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கோவில்பட்டி, கழுகுமலை தீயணைப்பு துறையினர் தண்ணீரில் மூழ்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை 5 மணியளவில் அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். கயத்தாறு போலீசார் அவரது உடலை கைப்பற்றி, அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


