குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வரும் 23ஆம் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக். 2 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. அக். 3ஆம் தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறும்.
விழாவை முன்னிட்டு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு காவல் துறை, ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை உள்ளிட்ட அனைத்து துறைச் சார்ந்த அலுவலர்கள் இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ராட்டினங்கள், கண்காட்சிகளை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். கூடுதல் வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா, மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேது ராமலிங்கம், கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹீமான்ஷீ மங்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், திருச்செந்தூர் கோட்டாட்சியர் ரா.கௌதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


