எட்டயபுரத்தில் பெண் போலீஸ் கணவரை கத்தியால் தாக்கி பணம் பறித்த ஐ.டி.ஐ. மாணவர் சிக்கினார். மேலும் 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம், போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சாமுவேல் மகன் ஜேசுராஜ்(47). இவர் டிராக்டரில் கட்டுமானத்திற்கு தேவையான தண்ணீர் விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி விளாத்திகுளத்தில் தலைமை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
ஜேசுராஜ் நேற்று முன்தினம் இரவு டிராக்டரை வழக்கமாக தனியார் தீப்பெட்டி தொழிற்சாலை அருகே நிறுத்தி விட்டு போலீஸ் குடியிருப்பிற்கு நடந்து சென்று கொண்டிருந்தா். அப்போது அவரை மொபட்டில் அரிவாள், கத்தியுடன் பின் தொடர்ந்து சென்ற 6 வாலிபர்கள் திடீரென வழிமறித்து தாக்கியுள்ளனர். அவரை கையில் கத்தியால் குத்தி பணம் தருமாறு மிரட்டினர்.
அவரிடம் பணம் இல்லாததால் மொபைலில் இருந்து ஜிபே மூலம் ரூ.2,300ஐ அனுப்ப வைத்துள்ளனர். பின்னர் அவரது மொபல் போனை பறித்து கீழே வீசி உடைத்ததுடன், போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டிவிட்டு தப்பி ெசன்றுவிட்டனர்.
அவர் எட்டயபுரம் போலீசில் புகார் செய்து விட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்த போலீசார் எட்டயபுரம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான வழிப்பறி கும்பலை சேர்ந்த ஒருவர் சிக்கினார். கோவில்பட்டி அருகேயுள்ள கடலையூர் வீட்டிலிருந்த அவரை போலீசார் பிடித்து எட்டயபுரம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
அதில், 17 வயதுடைய அவர் ஐ.டி.ஐ. ஒன்றில் படித்து வருவதாகவும், கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து ஜேசுராசுவிடம் பணம் வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் தலைமறைவாக உள்ள கூட்டாளிகள் 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.


