மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தில் மகிமைப் பெருவிழாவையொட்டி திருப்பலி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கடற்கரை கிராமத்தில் மணல் குன்றின் மீது அமைந்துள்ள திருச்சிலுவை நாதர் ஆலயத்தில் 446-ம் ஆண்டு மகிமை திருவிழா கடந்த 4-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் முதல் விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி நடந்தது. செப்.12-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு திவ்ய ஐந்து திருக்காய சபையின் தேர்வுக்குழு நியமனம், மெய்யான திருச்சிலுவை பவனி நடந்தது. செப்.13-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி நடந்தது.
இதில் கேரளா உள்பட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அன்று மாலை 6.30 மணிக்கு திருவிழா மாலை ஆராதனையை ஆயர் நடத்தினார்.நேற்று காலை 4 மணிக்கு புனித யாகப்பர் ஆலயத்திலும் தொடர்ந்து திருத்தலத்தில் தமிழ், மலையாளத்தில் திருப்பலியும், காலை 6 மணிக்கு திருத்தலத்தை சுற்றி ஐந்து திருக்காய சபையினர் பவனி நடந்தது. தொடர்ந்து ஆயர் திருப்பலி நடத்தினார்.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். பகல் 11 மணிக்கு திருப்பலியும், மாலை 4 மணிக்கு புனித யாகப்பர் ஆலயத்தில் நற்கருணை ஆசீர், மெய்யான திருச்சிலுவை முத்தம் செய்தல், மாலை 5.30 மணிக்கு திருத்தலத்தில் கொடியிறக்கம், நன்றி திருப்பலியும் நடந்தது. வருகிற 21-ஆம் தேதி 6.30 மணிக்கு திருப்பலி, கொடி மரம் இறக்குதல் நடக்கிறது.


