தூத்துக்குடியில் பருவமழையை முன்னிட்டு மாநகராட்சி பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். பின்னர் அவர் பேசுகையில் “வரும் மழை காலத்தை எதிர்கொண்டு மாநகராட்சி பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் பகுதியிலுள்ள கிருஷ்ணராஜ புரத்தில் 30, 40 ஆண்டு காலமாக போடப்படாத சாலைகள், கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு மாநகராட்சி சார்பில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஹவுசிங் போர்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார். முகாமில் மண்டல இணை ஆணையாளர் ராஜா ராம் மண்டல தலைவர் நிர்மல் ராஜ் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


