ஆலந்தலை இயேசுவின் திருஇருதய அற்புதக்கெபி திருவிழா சிறப்பு திருப்பலி நேற்று நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் பிரசித்தி பெற்ற இயேசுவின் திருஇருதய அற்புதக்கெபி திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவநாட்களில் தினமும் காலை 6.10 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும், பகல் 11.30 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடந்தது. நேற்று அற்புதக் கெபி பெருவிழா நடந்தது. இதையொட்டி காலை 5.15 மணிக்கு வெம்பூர் பங்குதந்தை குமார்ராஜா முதல் திருப்பலி நடத்தினார்.
காலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பெருவிழா சிறப்புத் திருப்பலி மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் 10, 12 ஆம் வகுப்பு மற்றும் திறனாய்வுத் தேர்வில் தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி முதல்வர் ரூபஸ் தலைமையில் ஆங்கில திருப்பலி நடந்தது. பகல் 11.30 மணிக்கு கூத்தங்குழி பங்குத்தந்தை ஆண்ட்ரூ டிரோஸ் வார வழிபாடு திருப்பலி நடந்தது. மாலை 4.30 மணிக்கு அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தனம் தலைமையில் திருயாத்திரை திருப்பலி நடந்தது. பின்னர் மாலை 6 மணிக்கு சென்னை அருள்பணி ஜான்சன் தலைமையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீரை தொடர்ந்து கொடியிறக்கம் நடந்தது.
விழாவில், அருட்தந்தைகள் சகாயம், பென்சிகர், அமலன், சகாயம், பீட்டர்பால், விஜின், பாலன், ஜார்ஜ், ஆலந்தலை ஊர்நலகமிட்டி தலைவர் ஆசைதம்பி, உதவி தலைவர் கேஜிஸ், செயலாளர் சுவர்க்கின், பொருளாளர் ஆரோக்கியம் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆலந்தலை பங்குதந்தை சில்வெஸ்டர், உதவி பங்குத்தந்தை அந்தோனி அருண் டைட்டஸ், அருட்சகோதரிகள், ஊர் நலகமிட்டியினர், திருத்தல நிதிக்குழுவினர், பக்த சபையினர் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.


