தூத்துக்குடியில் அன்னை வேளாங்கண்ணி புதிய ஆலயம் அர்ச்சிப்பு விழா மற்றும் கொடியேற்றம் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் அன்னை வேளாங்கண்ணி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு அர்ச்சிப்பு செய்து திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் கலந்து கொண்டு புதிய ஆலயத்தை திறந்து வைத்து பின்னர் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டு அருளாசி வழங்கினார்.
முன்னதாக அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு கொடி மரத்தில் நாகை வேளாங்கண்ணி ஆலயத்தில் இருந்து வழங்கப்பட்ட வேளாங்கண்ணி மாதா உருவம் பொறித்த கொடி, ஆயர் ஸ்டீபன் பங்குத்தந்தை சந்தியாகு ஆகியோர் தலைமையில் பவனியாக எடுத்துவரப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது
இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வேளாங்கண்ணி மாதாவை வழிபட்டு சென்றனர். திருவிழாவை தொடர்ந்து ஒவ்வொரு நாட்களும் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதா சப்பரப்பவனி வருகிற செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி நடைபெற உள்ளது.


