தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் நலத்திட்ட பணிகளையும் கூடுதலாக ஆசிரியர்களைச் செய்ய சொல்வதால் கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் முஜிபுர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி, கடமையே கண்கண்ட தெய்வம்” மாணவர்கள் நலன் எனக் கூறிக்கொண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உளவியலறியாது ஆசிரியர்களையும் மாணவர்களையும் இயந்திரமாக எண்ணி, இயந்திரம் பழுதடையும் வரை வேலை செய்து கொண்டே இருப்பதுபோல ஆசிரியர்களையும், மாணவர்களையும் 100% தேர்ச்சி,சராசரி மதிப்பெண்கள் உயர் கல்வி வழிகாட்டி மற்றும் கல்லூரி கனவு என பள்ளிக்கல்வித்துறையானது ஆசிரியர்களுக்கு அதிக பணிச்சுமை அளித்து இயந்திரகதியாக நடத்துகின்றனர்.
ஆசிரியர் பணி என்பது மிகவும் உணர்திறன் மிக்க பணியாகும். அந்தப் பணியினை மேற்கொள்வதற்கு ஆசிரியர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாகசமூக சுற்றுசூழலின் உற்பத்தியின் விளை பொருட்களே மனிதனாவான் . ஒரு மனிதனை சிறப்பு மிக்க மனிதனாக மாற்ற வேண்டுமெனில் முதலில் அவன் வாழும் சமூகத்தின் சுற்றுச்சூழலை சிறந்ததாக மாற்ற வேண்டும்.
அப்படி இருக்கையில் மாணவர்களின் மதிப்பெண்களின் அளவிலான தேர்ச்சியோ அல்லது தோல்வியோ பெறுவது என்பது அவர்களின் சமூக சூழலின் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் ஆசிரியர்களை மட்டும் எப்படி பொறுப்பேற்க வைக்க முடியும். மேலும் மாணவர்களிடத்தில் இருக்கும் ஏற்ற தாழ்வுகள் அனைத்தும் களையும் போதே அவர்களின் மதிப்பெண்களில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளும் களைய ஏதுவாக அமையும்.
உளவியல் படி ஒரே வகுப்பறையில் மீத்திறன் கொண்ட மாணவர்களும், திறமையான மாணவர்களும், அதே நேரத்தில் திறன் குறைந்த மாணவர்களும், அதிதிறன் குறைந்த மாணவர்களும் இருப்பதாக கூறப்படுகின்றது. ஒரே வகுப்பு மாணவர்களில் வலியோர்களும், வறியோர்களும், சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர்களும், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களும், இருப்பார்கள். எனவே ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் சமூகத்தில் ஒரே வகுப்பில் உள்ள மாணவர்களில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்களுடைய படிப்பதற்கான திறனும் மேலும் அந்தப் படிப்பினை உள்வாங்க கூடிய திறனும் வேறுபட்டே இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை.
அப்படி இருக்கையில் 100 சதவிகித தேர்ச்சி என்பதே அறிவியலுக்கு முரண்பாடான ஒன்றாகவே காணப்படுகின்றது. மேலும் இன்றைய சூழலில் ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் பணியினை தவிர பள்ளிக்கல்வித்துறையால் செயல்படும் மாணவர் நலத்திட்ட பணிகளையும் செய்ய ஆசிரியர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அதுவும் குறிப்பாக புள்ளி விவரங்களை திரட்டக்கூடிய பணியிலேயே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றனர்.
இன்னொரு புறம் மாணவர்களின் சமூக சுற்றுச்சூழலானது நல்ல முறையில் இல்லாத பட்சத்தில் 100% தேர்ச்சி என்பதே முடியாத ஒன்று. சராசரி என்பது அதனிலும் முரண்பாடாகவே உள்ளது. அப்படி இருக்கையில் எந்த ஒரு மாணவனும் தேர்வில் தோல்வி அடைந்தால் அதனுடைய முழு பொறுப்பையும் ஆசிரியரின் மீது சுமத்தவது எந்த விதத்தில் நியாயமாகும்.
ஏற்றத்தாழ்வுள்ள சமூகத்தில் பள்ளிக்கு வராத மாணவன், பெற்றோரை இழந்த மாணவன், வறுமையினால் துடித்துக் கொண்டிருக்கும் மாணவன், குடிகார தந்தையினால் பாதிக்கப்பட்ட மாணவன், சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்ட மாணவன், போதைப் பொருளுக்கு அடிமையாக இருக்கும் மாணவன், எதிர் பாலின ஈர்ப்பினால் கவனம் சிதறிய மானவன் இப்படி பல பின்புலங்களில் இருந்து வரும் மாணவனின் சு தேர்ச்சிக்கோ அல்லது தோல்விக்கோ ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் இந்த சமூகமும் சேர்ந்தே பொறுப்பாகும்.
மேலும் தற்பொழுது மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் பொறுப்பு என கட்டாயடுத்துவது சமூகமும், அரசும் தங்களுடைய பொறுப்பினை தட்டிக் கழிப்பதாகவே எண்ண தோன்றுகின்றது. இன்றைய சூழலில் பள்ளிகளில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பெண் ஆசிரியர்களே உள்ளனர்.
அவர்கள் இரவு பொழுதும் பாராது மாணவர்களுக்கு உயர் கல்வி காரணமாக கைபேசி மற்றும் இதர தொழில்நுட்பங்களின் வாயிலாக தொடர்பு செய்வதும் அதற்காகவே அதிக நேரத்தினை செலவிட கூடிய வகையில் இருப்பதும் ஒரு வகையில் அந்தப் பெண் ஆசிரியரின் குடும்பத்திலேயே பலவித சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இயல்பாகவே ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு கனவு என ஒன்று இருக்கக்கூடும்.
மேலும் நாம் மதிப்பெண்கள் ஒன்றையே மையமாக வைத்து மாணவர்களை குறிப்பிட்ட பாடங்களை மட்டும் உயர் கல்வியின் தேர்வு செய்யச் சொல்வது எந்த விதத்திலும் நியாயமாகாது. அது மாணவர்களது கனவில் வேறொருவர் கட்டாயப்படுத்தி திணிப்பதற்கு சமமாகிவிடும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெரும்பாலான குடும்பங்களில் தங்கள் பிள்ளைகளை உயர்கல்வி படிக்க வைப்பதில் ஆர்வம் காட்டாமலேயே இருக்கின்றனர். அத்தகைய பின்புலங்களில் உள்ள குடும்பங்களில் உள்ள மாணவர்களை நாம் கட்டாயப் படுத்தும் பொழுது ஆசிரியர்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
எனவே மாணவர்களின் உயர் கல்விக்கு மற்றும் பள்ளி கல்வித்துறையால் மாணவர்களின் ஆசிரியர்களை பொறுப்பேற்க செய்யாமல் அரசானது முறையாக தலையிட்டு அவர்களுடைய பொருளாதார, சுகாதார இது போன்ற இதர பிரச்சனைகளை தீர்த்து அவர்களுடைய சமூக சுற்றுச்சூழலை நல்ல முறையில் அமைப்பதன் மூலமே மாணவர்களை உயர் கல்விக்கு எளிதில் கொண்டு வர முடியும். இதனால் இனிவரும் காலங்களில் ஆசிரியர்களை முழுமையாக கற்றல் கற்பித்தல் பணியில் மட்டுமே ஈடுபடுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும் மாணவர்களை மனதளவிலும், உடலளவிலும் ஆரோக்கியமாக கல்வியை கற்பதற்கு ஏற்ற வகையில் சமூக சூழ்நிலையை இந்த சமூகமும், அரசும் சேர்ந்து ஏற்படுத்துமாறு தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


