கோவில்பட்டி அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் மாணவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெங்கடாசலபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் பூபதிராஜன் (37) என்பவர் கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், கல்லூரியில் நேற்று மாணவர் கருத்தரங்கு நடைபெற்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்குவந்த முன்னாள் மாணவரான இலுப்பையூரணி, கூசாலிபட்டி, சாந்தி நகரைச் சேர்ந்த வள்ளிமுத்து மகன் மனோஜ் (22) அவரிடம் தகாத வார்த்தைகள் கூறி தனக்கு மாற்றுச் சான்றிதழைத் தருமாறு கேட்டு தாக்கினார். இதில், பலத்த காயமடைந்த பூபதிராஜன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து மனோஜை கைது செய்தனர்.


