சி.எஸ்.ஐ. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் செப்டம்பர் 7ம் தேதி நடைபெறுகிற திருமண்டல பெருமன்ற உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது.
தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து திருமண்டல தேர்தலை நடத்தவும், அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதி பதி ஜோதிமணி நியமிக்கப்பட்டு கடந்த ஜுன் மாதம் 26ம் தேதி தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். திருமண்டல தேர்தல் அதிகாரிகளாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் ரெத்தினராஜ் மற்றும் ஜாண் சந்தோஷம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, பல்வேறு கட்டங்களாக நடைபெறும் தேர்தலின் தொடக்கமாக ஜுலை 13ந் தேதி ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் வாக்காளர் பட்டியல் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. மேலும் சபை மக்களால் மேல்முறையீடு செய்யப்பட்டு ஜுலை 23ந் தேதி திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் அந்தந்த ஆலயங்களில் ஒட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. இத் தேர்தலில் போட்டியிட சபைமக்கள் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபை பிரதிநிதிகள் தேர்துக்கான வேட்புமனுவை பெற்று அந்தந்த சபைகளில் உள்ள சேகர அலுவலகத்தில் சேகரத் தலைவரிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. இம் மனுவை திரும்ப பெற வருகிற ஆகஸ்ட் 19 ந் செவ்வாய்கிழமை கடைசி நாளாகும்.
திருமண்டல பெருமன்ற உறுப்பினர் தேர்தல் : பின்னர் செப்டம்பர் 7ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆராதனையைத் தொடர்ந்து முதற்கட்டமாக திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் சேகர மன்ற பிரதிநிதிகள் தேர்தல் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 20ந் தேதி சேகரமன்ற அளவிலும் மற்றும் அக்டோபர் 11ந் தேதி சபை மன்ற அளவிலும் பல்வேறு பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெறுகிறது.
திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: இறுதியாக நவம்பர் 12, 13 தேதிகளில் நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் வைத்து திருமண்டல பெருமன்ற கூட்டம் நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல நிர்வாகிகளாக உபதலைவர், லே செயலர், குருத்துவ காரியதரிசி, திருமண்டல பொருளாளர் ஆகியோருக்கான தேர்தல் நடைபெறுகிறது


