திருச்செந்தூரில் ரூ.18 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.
திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். விசேஷ நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் புதிய நகராட்சி அலுவலகம் எதிர்ப்புறம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.18 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
விழாவிற்கு திருச்செந்தூர் உதவி கலெக்டர் சுகுமாறன் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், நகராட்சி ஆணையாளர் ஈழவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் திருச்செந்தூரில் இருந்து உடன்குடிக்கு புதிய பஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பஸ் திருச்செந்தூரில் இருந்து ஆலந்தலை, கல்லாமொழி, குலசேகரன்பட்டினம் வழியாக உடன்குடி செல்கிறது. நிகழ்ச்சியில், திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம், நகராட்சி பொறியாளர் சரவணன், போக்குவரத்து துறை தூத்துக்குடி மண்டல துணை மேலாளர் ரமேசன், திருச்செந்தூர் கிளை மேலாளர் ராஜசேகரன், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


