மாநகராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 13-ல் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தின் தலைவர் சங்கர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “பேரழிவு கோவிட் தொற்று நோய் காலங்களிலும் தொடர் மழை வெள்ள காலங்களிலும் உயிரை பணயம் வைத்து தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் சுகாதாரத்தையும், மக்களுக்கான மீட்ப்பு மகத்தான பணிகளை செய்த, செய்து வருகிற இந்த சுகாதார பணியாளர்கள் மீது தமிழக அரசும், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகமும் வர்க்க, சாதிய, பாலியல் 3 விதமான பாகுபாடுகளையும், ஒடுக்குமுறைகளையும் அனுசரிப்பதற்கு தாங்கள் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் மேல் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் பட்டியல் சாதி தொழிலாளர்களுக்கு சமூக நீதியை திமுக அரசு ஏற்படுத்த வேண்டும். மாநில அளவில் தமிழகத்தில் கவுரமான வேலை, ஊதியம், பணி நிரந்திரம் ஆகிய கோரிக்கைகளக்காக தொடர் போராட்டங்களை தூய்மை தொழிலாளர்கள் தினம்தோறும் நடத்தி வருகிறார்கள். மாண்புமிகு தமிழக முதல்வர், சட்டமன்ற தேர்தலில் இந்த தொழிலாளர்களை பணி நிரந்திரம் செய்வோம் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி தரவேண்டும் எனவும், தூய்மை பணிகளில் அவுட்சோர்ஸ் முறையை கைவிடவேண்டும் என பேசிய அவர் தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கைகளில் கூறியிறுப்பதாவது
மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை தொழிலாளர்களை தமிழ்நாடு பணி நிரந்திர 1981 சட்டப்படி பணி நிரந்திரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் அரசாணைப்படி ஓட்டுனர்களுக்கு மாத ஊதியம் ரூ.24090/-ம், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.20460/- வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து துறை தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் வழங்குவது போல் தூய்மை தொழிலாளர்களுக்கும் 8.33 போனஸ் மற்றும் 11.67 சத கருணை தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூய்மை தொழிலாளர்களின் போர்குணமிக்க போராட்டங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அறிவித்த 2024ம் ஆண்டிற்கான குறைந்த பட்ச ஊதியமாக ஓட்டுனருக்கு நாள் ஊதியம் ரூ.598/-ம் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.497/-ம் மார்ச் 2025ல் மட்டும் ஒரு மாதம் வழங்கிவிட்டு, ஏப்ரல் 2025 முதல் வழங்க அவர்லேண்ட் நிர்வாகம் மறுத்து வருகிறது. இது சம்பள பட்டுவாடா சட்டம் 1936க்கு எதிரானது.
ஊதியம் வழங்குவதில் விடுப்பு எடுத்த நாட்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்வதில் அவர்லேண்ட் ஒப்பந்தகாரர் முறைகேடுகள் நடத்தி தொழிலாளர்கள் ஊதியத்தை சுரண்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏப்ரல் 2025லிருந்து அவர்லேண்ட் ஒப்பந்ததாரர் வழங்காத குறைந்த பட்ச ஊதிய பாக்கியையும், முறைகேடாக தொழிலாளர்கள் விடுப்பிற்கு பிடித்தம் செய்த ஊதியத்தையும் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளர் ஊதியத்தில் ஒப்பந்த நிர்வாகம் 13 சதம் PF பணம் செலுத்தவும், தொழிலாளர் 12 சதம் பிடித்தம் செய்ய வேண்டும் என்ற சட்டத்திற்கு மீறுதலாக தொழிலாளர்களின் ஊதியத்திலேயே 25 சத பணபிடித்தம் செய்து முறைகேடு செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ESI திட்டத்தில் தொழிலாளர்களிடம் ஊதியத்தில் 0.75 சதமும், ஒப்பந்ததாரர் 3.25 சதமும் பிடித்தம் செய்ய சட்டவிதி உள்ள போது, ஒப்பந்தாரர் முறைகேடாக தொழிலாளர் ஊதியத்தில் ரூ.50/- பிடித்தம் செய்யும் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், ESI திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் சிகிச்சை பெற உரிய ஆவணங்களையும் PF, ESI க்கான அடையாள அட்டையும் தொழிலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்படி திட்டத்திற்காக பிடித்தம் செய்யப்பட்ட பணம் முறையாக அந்த நிறுவனங்களில் கட்டுவதை உறுதிபடுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ஊதியத்துடன் வாரவிடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மை தொழிலாளர்களுக்கு, அடிப்படை உபகரணங்கள். யூனிபார்ம், காலனிகள், மழை கோட்டு, பணிபுரியும் வார்டுகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை, சுத்தம் செய்ய குளியல் அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியின் போது மரணமடைந்த தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் விதத்தில் EDLI திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பீஸ்ரேட் அடிப்படையில் பணிபுரியும் தினக்கூலி தூய்மை தொழிலாளர்களை சட்டவிரோதமாக மண்டலம் விட்டு மண்டலம் தொலைதூர இடமாறுதல் செய்வதை தடை செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு சட்டப்படி குற்ற குறிப்பாணை வழங்கி விசாரணை நடத்தி தண்டனை வழங்கும் சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கை முறையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூய்மை பணி வாகனம் (TATA, ACE) பதிலி ஓட்டுனர்களுக்கு முழுமையாக மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். TPC தொழிலாளர்களுக்கும் மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உழைக்கும் மக்களுக்காக போராடிவரும் சிபிஐ (எம்-எல்) கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் கண்ணையன் மீது காவல்துறை போட்ட பொய்வழக்கை வாபஸ் பெற வேண்டும். அவரை விடுதலை செய்ய வேண்டும்.
தொடர்ச்சியாக போர்குணமிக்க போராட்டங்களை நடத்தி வரும் சென்னை மண்டலம், 5,6 தூய்மை தொழிலாளர்கள் போராட்டத்திற்கு பேரவை ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது. சென்னை மாநகராட்சி 01.08.2025 முதல் தூய்மை பணியை அவுட்சோர்ஸ் செய்வது என்ற முடிவுக்கு எதிரான தாவா சென்னை தொழிற்தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள போது, சென்னை மாநகராட்சி நிர்வாகம் சட்டவிரோதமாக தூய்மை பணியாளர்களை அவுட் சோர்ஸ் நிறுவன தொழிலாளராக பதிவு செய்ய நிர்பந்திப்பதை கைவிட வேண்டும்.
மாண்புமிகு முதலமைச்சர். எதிர்கட்சித்தலைவராக இருந்த போது சென்னை மாநகராட்சிக்கு தூய்மை தொழிலாளர்களை பணிநிரந்திரம் செய்ய கடிதத்தின் அடிப்படையிலும் தேர்தலில் அளித்த வாக்குறுதிபடியும், தூய்மை பணியாளர்களை பணிநிரந்திரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசும், மாநகராட்சி நிர்வாகமும் பேச்சுவார்த்தை LTUC-AICCTU சங்கத்துடன் நடத்தி, தொழில் அமைதி காண வேண்டும். போராடும் சென்னை தூண்மை தொழிலாளர்களுக்கு முழுமையாக துணை நிற்போம்.
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல சுகாதார அதிகாரி ராஜபாண்டி பெண் சுகாதார பணியாளரை, முறைகேடாக அதிகாரத்துவ திமிரில் இழிவாக பேசியது, அவரை அடிக்க முயற்சித்து போக்சோ சட்டப்படியான குற்றங்களை செய்த அவர் நடவடிககைக்கு பேரவை கடும் கண்டனம் தெரிவிக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுத்து பெண்கள் மீதான கவுரவத்தை பாதுகாக்கவும் தொழில் அமைதி காணவும் வேண்டும் எனவும், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 13-ல் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.


