கோவில்பட்டி அருகே டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த வெங்கடேஸ்வரபுரம் நடுத் தெருவைச் சேர்ந்த அய்யலுசாமி மகன் சௌந்தரராஜன் (44). விவசாயியான இவர் கோவில்பட்டியில் உரம் வாங்கிவிட்டு டிராக்டருடன் கூடிய டிரைலரில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம்.
கோவில்பட்டி-குருமலை சாலையில் வெங்கடேஸ்வரபுரத்தை அடுத்த தனியார் ஆட்டுப் பண்ணை அருகே வந்தபோது, டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


