திமுக ஆட்சியில் 4 வருடங்களாக செய்ய முடியாததை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில், 45 நாட்களுக்குள் எப்படி செய்ய முடியும்? என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
பாஜக முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் மோடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது மட்டுமல்லாமல் 4,500 நலத்திட்ட உதவிகளை இன்று சமர்ப்பிக்க வருகிறார் என்பது மிக மகிழ்ச்சி. வாழ்நாளில் மிகப்பெரிய சாதனையா தினம் இன்று. வஉசி போன்றவர்கள் எல்லாம் இன்று விண்ணில் இருந்து வாழ்த்தி கொண்டிருக்கின்றனர்.
திமுக வீடு வீடாக சென்று பாஜக நிதி கொடுக்கவில்லை என்று சொல்கிறோம் என்கின்றனர். இன்று பாஜக அரசு 4500 கோடி ரூபாய் நிதி கொடுக்கிறது என்று திமுக வீடு வீடாக சென்று சொல்ல வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் என்று நான்கு வருடங்களாக செய்து முடியாததை 45 நாட்களுக்குள் எப்படி செய்ய முடியும்? என்ன மனுக்கள் எந்த பெட்டிக்குள் போல் தூங்குகிறது என்பது தெரியாது.
உங்களோடு ஸ்டாலின் என்றால் மக்கள் இங்கு இருக்கிறார்கள் நேரடியாக வந்து மக்களை பார்த்திருக்கலாமே. தமிழ்நாட்டில் பெரியார் புராணம் பாட முடியாது. பெரிய புராணம் தான் பாட முடியும். ஆன்மீக தமிழ் தான் ஓங்கி இருக்கப் போகிறது. காவி தமிழ் தான் ஓங்கி இருக்கப் போகிறது. தமிழகத்தில் இன்று காவல் துறை அதிகாரிக்கு கூட பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் நேர்மையாக இருக்கிறவர்கள் அனைவரும் குறிவைக்கப்படுகின்றனர்.
இந்தியாவிலேயே தமிழக சுகாதாரதுறை தான் முதல் இடத்தில் இருக்கிறது என்கிறீர்கள். பிறகு முதல்வர் ஏன் அங்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை? ஏன் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை. உலகத்தரம் வாய்ந்தது என்கிறீர்கள் பிறகு ஏன் முதல்வரங்கு செல்லவில்லை. இதில் உங்களுடன் ஸ்டாலின், மக்களுடன் ஸ்டாலின் என்கிறீர்கள் என்று கூறினார்.


