தூத்துக்குடியில் பிரதமர் மோடி நாளை (ஜூலை 26) வருவதை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு தனி விமானம் பிரதமர் மோடி வருகிற 26ஆம் தேதி இரவு 8 மணி அளவில் வருகிறார். தொடர்ந்து, சர்வதேச தரத்தில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள விமான நிலைய விரிவாக்கத்தை அவர் திறந்து வைப்பதுடன், ரூ.4,500 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவான ‘எஸ்பிஜி’ குழுவின் ஏடிஜிபி சுரேஷ்குமார் தலைமையில் சுமார் 80 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழக ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல ஐஜி பிரேமானந்த் சின்ஹா, நெல்லை சரக டிஐஜி பொறுப்பு சந்தோஷ் ஹாதிமணி ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எஸ்.பி.க்கள் தலைமையில் சுமார் 2100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். விழா மேடையில் இருந்து மொத்தம் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய காவல் படையினருடன் இணைந்து தமிழக போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
ட்ரோன்களுக்கு தடை: முன்னதாக மாவட்டம் முழுவதும் வருகிற 27ஆம் தேதி காலை வரையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்கள் குறித்த விவரங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளன. தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சந்தேக நபர்கள் குறித்தும் கடந்த 3 நாள்களாக விசாரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


