தூத்துக்குடியை முத்தையாபுரத்தைச் சேர்ந்த இளைஞர் காட்வின், பெண்கள் பிரச்சினைகள், முன்னேற்றங்கள் குறித்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அக்கால சமூகத்தில் பெண்ணியச் சிந்தனைகளில் மறுமலர்ச்சி செய்த பாரதியாரின் புரட்சி பாதைகளில் பயணிக்கும் இவர் “நவீன பாரதியாக மக்களிடையே பிரகாசிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “என் பெயர் காட்வின் பால்ராஜ். டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ளேன். சத்யம் செய்தி சேனலில் செய்தி தயாரிப்பாளராக பணியாற்றினேன்.
தற்போது தூத்துக்குடியில் விளம்பரம் மற்றும் விளம்பர ஊக்குவிப்புத் துறையில் இருக்கிறேன். தோழமை உணர்வுடன் நிறைய பெண்கள் என்னிடம் தனது கஷ்டங்களை பகிர்ந்துள்ளனர். தாங்கள் விரும்பும் துறையில் சாதிப்பதற்கு தோழிகளை விட தோழர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆனால், நம்பிக்கையான நண்பர்கள் கிடைப்பது அரிது என்றனர். பலரின் எண்ணங்களை கேட்ட நான் அவர்களுக்கு நம்பிக்கையான நண்பனாக நல்வழி காட்டுகிறேன்.
பெரும்பாலான பெண்கள் ஊடகம், விளம்பர துறைகளில் வேலை செய்வதற்கு ஆர்வம் இருந்தாலும் வீட்டில் அனுமதி இல்லாமல் முடங்கி இருப்பதாக சொன்னார்கள். அவர்கள் வலிகளை அறிந்த நான் பெண்களுக்காக புதிய நோக்கில் “இலட்சிய கனவு” என்ற பெயரில் ஒரு திட்டத்தை ஆரம்பித்து நடத்துகிறேன். இதில், பெண்களின் கல்வி, வேலை, ஆர்வம், சுய தொழில், பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், விழிப்புணர்வுகள் வழங்குகிறேன்.
தற்போது தூத்துக்குடியில் “காட்வின் புரமோஷன் என்ற பெயரில் தனியாக ஒரு நிறுவனம் தொடங்கியுள்ளேன். இதில் பணிபுரியும் பெண்களுக்கு உடல் ரீதியான மாத சுழற்சி காலத்தில் விடுமுறை அளிப்பதாக உள்ளேன். படிப்பு, பணி நிமித்தமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கும் பெண்களுக்கு உணவு முதல் பாதுகாப்பு வரை அத்தனை வசதிகளையும் நம்பிக்கையாக செய்வதற்கு “மீட் அப்” என்ற குழு அமைப்பை ஆரம்பிக்கும் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளேன்.
சில தொழில் அமைப்புகள் பணத்திற்காக பெண்களை வேறு பாதையில் திசை திருப்புகின்றன. பெண்களுக்கு அனைத்து விஷயங்களிலும் விழிப்புணர்வு, கூர் நோக்கும் திறன் இருந்தால் இக்குற்றங்களை தடுக்கலாம். இதனையும் களத்தில் இறங்கி செய்து வருகிறேன். சில உயர்மட்ட பெண்களுக்கு புரமோ ஷன் செய்திருக்கிறேன். நடுத்தர பெண்களுக்கு அவர்கள் உதவுவார்கள் என நினைத்தேன்.
ஆனால் ஏணியாக மட்டுமே என்னை அவர்கள் பயன்படுத்தி கொண்டார்கள். பெண்களால் பெண்களுக்காக என்ற நோக்கத்தில் “குழு வாட்ஸ்அப்” செயலியை தயார்படுத்தியுள்ளேன். இதன் மூலம் பெண்களின் நெருக்கடிகள், சிக்கல்களை தகர்த்தெறிந்து, அவர்கள் விரும்பும் துறையில் சாதனை படைக்க வைப்பதே என் மேலான நோக்கமாகும். தகுந்த நேரத்தில் சரியான வழி காட்டுதலின்றி அதிகமான பெண்கள் சமூக வலைதளங்களில் எதிர் மறையாக ஈடுபட்டு வருகின்றனர்.
மாய வலைகளில் சிக்கிய பெண்களை மீட்பதற்கு தோழிகளோடு இணைந்து கருத்தரங்கு உரையாடல்களை மேற்கொண்டு வருகிறேன். ஒரு பெண் பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக வாழ்ந்தால் தான் குடும்பமும், தேசமும் செழித்தோங்கும்…. இவ்வாறான பெண்மை வளர்ச்சியுற காட்வின் அவர்கள் அளித்த கருத்துக்கள் பெண்கள் அனைவரிடமும் தன்னம்பிக்கை ஒளியை பரவசமாக பரவச் செய்யும் என்பதில் சிறிதும் ஐயமில்லை தானே… – நன்றி பெண்கள் மலர்


