திருச்செந்தூரில் அரசு பஸ் மோதிய விபத்தில் காயமடைந்த பிகார் மாநில வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து செம்மறிக்குளத்துக்கு நேற்று முன்தினம் இரவு பயணிகளுடன் அரசுப் பேருந்து புறப்பட்டது. குலசேகரன்பட்டினம் வடக்கூரைச் சேர்ந்த ஜெயசிங் மகன் அல்டாப் (48) ஓட்டுநராக இருந்தார். அரசு மருத்துவமனை அருகே பேருந்து வந்தபோது, அல்டாப்புக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
அவர் பயணிகளைக் காப்பாற்றுவதற்காக பேருந்தை இடது ஓரமாக நிறுத்த முயன்றார். எனினும், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பைக் மீதும், அவ்வழியே நடந்து சென்ற பிகார் மாநிலத் தொழிலாளியான பா. தினேஷ் பவான் (40) மீதும் மோதியதுடன், மின்கம்பத்தில் மோதி நின்றது. திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் சென்று, இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
அல்டாப் மாரடைப்பால் ஏற்கெனவே இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த தினேஷ் பவான் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் நேற்று காலை உயிரிழந்தார். அவர், திருச்செந்தூர் கடற்கரையில் தனியார் நிறுவனத்தில் கட்டுமானத் தொழிலாளியாக வேலை பார்த்துவந்ததாகத் தெரியவந்தது. அவரது உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


