காயல்பட்டினத்தில் மகான் நெய்னை முகம்மது சாகிபு கந்தூரி விழாவை முன்னிட்டு குதிரை, ஒட்டகத்தில் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கு பவனி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையார் பள்ளிவாசல் ஜமாஅத் சார்பில் மகான் நெய்னா முகம்மது சாகிபுவின் 125-வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 14 நாட்களாக நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் காலையில் கத்முல் குரான் ஓதுதலும், மாலையில் மகானின் புகழ் மாலை பாடுதலும், இரவில் மார்க்க சொற்பொழிவும் நடந்தன.
நேற்று முன்தினம் நிறைவு நாள் நிகழ்ச்சிகளை சின்ன சம்சுதீன் பள்ளி கத்தீபு அபு மன்சூர் ஆலிம், கோமான் பள்ளி இமாம் முகைதீன், பள்ளியின் நிர்வாகி முகம்மது கனி ஆகியோர் பங்கேற்று நடத்தினர். இவற்றை லத்தீப் தொகுத்து வழங்கினார். தொடர்ந்து இரவில் குதிரை, ஒட்டகத்தில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளின் பவனி நடைபெற்றது.
இதை முன்னாள் கவுன்சிலர் அஸ்ரப், செய்யது அலி, புகாரி, ரியாஸ், யூசப், பீர் முகம்மது ஆகியோர் வழி நடத்தினர். மேளதாளத்துடன் சிலம்பாட்டம், வாள் வீச்சு, தீப்பந்தம் சுற்றுதல் ஆகிய வீர விளையாட்டுகளும் நடந்தன. பள்ளிவாசல் முன்னாள் தலைவர் ஜாரூக், பாரூக், முஸ்லிம் லீக் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொருளாளர் ஜெஸ்முதீன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நேற்று இரவில் முஸ்லிம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கந்தூரி கமிட்டி தலைவர் கரீம், துணைத் தலைவர் அகமது, செயலாளர் முகைதீன் பக்கிர், துணைச் செயலாளர்கள் செய்யது, ஷர்புதின், பொருளாளர் ஜாஹித் ஆகியோர் செய்திருந்தனர்.


