அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகிது என்பது முற்றிலும் தவறான தகவல் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “குழந்தை திருமணத்தை தடுக்க கடந்த 4 வருடங்களாக தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படுகிறது. 18 வயது முடிந்த பின்பு தான் பெண்களுக்கு ஆரோக்கியம் ஏற்படும். தற்போது 18 வயதிற்கு முன்பே கர்ப்பமாகிறார்கள் என்ற தகவல் வந்து கொண்டிருக்கிறது.
அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் மருத்துவமனைக்கு செல்ல கூடாது என்ற முடிவை அவர்கள் எடுக்கின்றார்கள். ஆகவே, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். அங்கன்வாடி மையங்கள் மூடப்பவதாக தவறானது செய்தி வருகிறது. மறு சீரமைப்பு செய்வதற்கு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றோம். குறைவான குழந்தைகள் உள்ள மையங்களில் அதன் அருகே உள்ள மையங்களில் சேர்க்க திட்டமிட்டு உள்ளோம்.
மேலும் வேறு எங்கேயாவது அங்கன்வாடி மையங்கள் தேவைப்பட்டால் இந்த மையத்தை அங்கு வைப்பதற்கு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகிறது என்று கூறுவது முற்றிலும் தவறானது, மலைப்பகுதியில் 34 சென்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கன்வாடி மையங்களின் வசதி மேம்படுத்துதல், விளையாட்டு உபகரணங்கள் வாங்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. 6500 அங்கன்வாடி மையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


