திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மணிவிழா கண்ட தம்பதியருக்கு சிறப்பு செய்ய முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த, இந்து மதத்தை சார்ந்த ஆன்மிக ஈடுபாடுள்ள 100 தம்பதியர்கள் வீதம், 20 இணை ஆணையர் மண்டலங்களில், 2000 தம்பதியருக்கு கோவில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும் என அறிவித்திருந்தார்.
இத்திட்டத்தின் கீழ் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் ஒரு தம்பதியருக்கு ரூ.2500 செலவில் புடவை (ரவிக்கை உள்பட), வேட்டிசட்டை, மாலை (2), வெற்றிலை-பாக்கு, பூ, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, வாழைப்பழம் (1 சீப்), பழ வகைகள், எவர்சில்வர் தட்டு, கண்ணாடி வளையல், சுவாமி படம் (சட்டைப் பை அளவு) வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது. எனவே விருப்பமுள்ள தம்பதிகள் அருகில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகம் மூலம் வருகிற 25.7.2025 தேதிக்கு முன்னதாக, உரிய படிவத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம், என தெரிவித்து உள்ளார்.


