கோவில்பட்டி அருகே நிலத்தில் உழவு பணியின் போது டிராக்டரின் கலப்பையில் சிக்கிய விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட கோபாலபுரத்தைச் சேர்ந்த சடகோப ராமானுஜம் மகன் கோவிந்தராஜன் (62). விவசாயியான இவருக்குச் சொந்தமான நிலத்தில், முடுக்குமீண்டான்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த வைரமுத்து மகன் மாரிச்சாமி டிராக்டர் மூலம் உழவு செய்து கொண்டிருந்தாராம்.
அப்போது அங்கு பணிகளை பார்த்துக் கொண்டிருந்த கோவிந்தராஜன், டிராக்டரின் கலப்பையில் சிக்கியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உறவினர்கள் அவரது சடலத்தை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிந்து டிராக்டர் ஓட்டுநர் மாரிச்சாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


