திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு வேண்டிய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு, இந்து முன்னணி சார்பில் மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர் இசக்கிலெட்சுமி அனுப்பியுள்ள மனுவில், “முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் உலகப் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக வருகின்ற ஜீலை 7ம் தேதி திங்கட்கிழமை காலை நடைபெற இருக்கின்றது.
இதற்கான யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல்கள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் யாகசாலை பூஜைகள் ஆரம்பித்த நாள் முதலே திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாடு முழவதும் உள்ள பக்தர்கள் வருகை தர ஆரம்பித்து விட்டனர்.
கும்பாபிஷேக தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்வை காண வரக்கூடிய சூழ்நிலையில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு தாங்கள் போக்குவரத்து வழி நெறிமுறைகளை அறிவிப்பு செய்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மார்க்கமாக வருகை தரும் கார், வேன் மற்றும் பேருந்துகள் எவ்விடத்தில் நின்று செல்ல வேண்டும் என்பதை அறிவிப்பு செய்ய வேண்டும்.
1. கும்பாபிஷேக விழாவிற்கு வரும் லட்சக் கணக்கான பக்தர்கள் எந்தெந்த வழிகளில் பிரகாரத்தின் அனுமதிக்கப்படுவார்கள் என்பதை முன் கூட்டியே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அறியும் வண்ணம் அறிவிப்பு செய்ய வேண்டுகிறோம்.
2. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு முறையான தங்கும் இடங்கள் உரிய கட்டணத்தில் கிடைக்கப்பட்டதா? என்பதை தாங்கள் கண்காணிக்க வேண்டுகிறோம்.
3. முன்கூட்டியே வருகை தரும் வெளியூர் பக்தர்கள் லாட்ஜ் மற்றும் சமுதாய கூடங்களில் தங்க இடம் கிடைக்காத நிலையில் அவர்களுக்கு கோவில் சுற்றுப்புறங்களில் தங்குவதற்கு பாதுகாப்பான இட வசதிகளையும், அவர்களுக்கு கழிப்பிடம் மற்றும் குளியலறை உள்ளிட்ட தேவையான பொது சுகாதார வசதிகளையும் செய்து தர வேண்டுகிறோம்.
4. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் வாகனங்களை பார்க்கிங் செய்ய கோவிலில் அருகாமையில் ஏதுவான இடங்களையும் தேர்வு செய்த அதற்கான அறிவிப்பை செய்ய வேண்டுகிறோம்.
5. பக்தர்களுக்கு பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேரூந்து வசதிகளையும் செய்து தர வேண்டுகிறோம்.
6. பொதுமக்களுக்கு ஏதுவாக கும்பாபிஷேக தினத்தன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கும் படியும் கேட்டுக் கொள்கிறோம்.
7. கோவில் நிர்வாகம் சார்பாக கும்பாபிஷேகம் மற்றும் அபிஷேகம் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ள என்னென் வழிமுறைகள் செய்யப்பட்டுள்ள விபரத்தை தெரிவிக்க கேட்டுக் கொள்கிறோம்.
8. இதை தங்கள் வாய்வழியாக, செய்தித்தாள்கள் மூலமாக பொது மக்களுக்கு தெரியப்படுத்தினால் மிக உபயோகமாக இருக்கும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


