தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்க, நமது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க தொடர்ந்து குரல் கொடுக்க கூடிய கட்சி திமுக மட்டும் தான் என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், ஓரணியில் தமிழ்நாடு நிகழ்வில் பேசிய கனிமொழி எம்.பி., எந்த காலத்திலும் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டோம், பாஜக தமிழ்நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்கிறது என்று சொன்ன அதிமுக. அதிமுகவை பாஜக அழைத்து மிரட்டியவுடன் பயந்துவிட்டார்கள். மறுபடியும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டார்கள். தமிழ்நாட்டிற்காக, தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்க, நமது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க தொடர்ந்து குரல் கொடுக்க கூடிய கட்சி திமுக மட்டும் தான்.
பள்ளிகளில் நல்ல கல்வி, உயர்கல்வி, வேலைவாய்ப்பு எல்லாம் கிடைக்க வேண்டும் என்றால் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும். அதற்குத் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் ஒரு அணியில் திரள வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட போது, ஒன்றிய அரசு பல பிரச்சினைகளைக் கொடுத்தது, அவற்றையெல்லாம் எதிர்கொண்டு சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். நமது குழந்தைகள் கல்விக்கு மத்திய அரசு 2,000 கோடி நிதி கொடுக்க வேண்டும், அதனையும் தரமறுக்கிறார்கள்.
இந்தி படித்தால் 2,000 கோடி நிதி தருவோம் என்கிறது ஒன்றிய அரசு. ஆனால் 10 ஆயிரம் கோடி தந்தாலும், இந்தி படிக்கமாட்டோம் என்று பதிலடி கொடுத்து, தமிழர்களின் சுயமரியாதையைக் காத்தவர் நமது முதலமைச்சர். விடியல் பயணம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் என பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்தாலும் தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாத்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று பேசினார்.


