தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் அமலுக்கு வந்தது. இத்திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர் உற்சாகமாக தண்ணீரை குடித்து மகிழ்ந்தனர்.
தமிழகத்தில் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தண்ணீர் குடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் ‘வாட்டர் பெல்’ திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்து இருந்தார். இந்த திட்டம் நேற்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகூடங்களில் அமலுக்கு வந்து உள்ளது.
இத்திட்டத்தின்படி பள்ளிக்கூட நாட்களில் தினமும் காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணி ஆகிய நேரங்களில் மணி ஒலிக்கும். அப்போது அனைத்து மாணவ, மாணவியரும் வகுப்பறையை விட்டு வெளியில் செல்லாமல், தாங்கள் வைத்து இருக்கும் பாட்டிலில் இருந்து தண்ணீரை எடுத்து குடிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். தேவையான தண்ணீரை அவர்கள் குடித்து கொள்ளலாம். தொடர்ந்து வகுப்புகள் நடைபெறும்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் நேற்று வாட்டர் பெல் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை 11 மணிக்கு அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் மணி ஒலித்தது. உடனடியாக மாணவ, மாணவியர் கொண்டு வந்திருந்த பாட்டில்களில் இருந்து தண்ணீரை குடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனால் வகுப்பறைகளில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. ஆசிரியர்களும் தண்ணீரை குடித்தனர். தொடர்ந்து மதியம் 1 மணி, மாலை 3 மணிக்கும் மணி ஒலிக்க மாணவ, மாணவியர் தண்ணீர் அருந்தி மகிழ்ந்தனர். இதேபோன்று அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் இத்திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியரை தண்ணீரை அருந்தி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.


