கோவில்பட்டியில் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வரும் தனியார் சிமெண்ட் செங்கல் ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐந்தாவது தூண் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் ஐந்தாவது தூண் அமைப்பின் தலைவர் சங்கலிங்கம் தலைமையில் சமூக ஆர்வலர்கள் அளித்த கோரிக்கை மனுவில், “கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி ஜெயம் நகரில் கண்மாய் அருகே உரிய அனுமதி பெறாமல் தனியார் சிமெண்ட் செங்கல் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை சுற்றி 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
மேலும் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஆலையின் மூலப் பொருட்களை வைக்க கட்டிடம் கட்டப்பட்டு இருப்பதாகவும், அந்தக் கட்டடத்தின் அருகே அரசின் சார்பில் அமைக்கப்பட்ட சிறிய மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி அருகே அதிக ஆழம் தோண்டி கட்டிடம் அமைக்கப்பட்டு உள்ளதால், அந்த மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கீழும் விழும் நிலையில் உள்ளது.
அதுமட்டுமல்லாது அதிலிருந்து வெளியேறும் மாசு காற்றில் பரவுவதால், குடியிருப்புகளில் இருப்பவர்கள் பாதிக்கப்படுவதாகவும், அருகில் இருக்கக்கூடிய நீர் நிலையும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. சிமெண்ட் செங்கல் தொழிற்சாலையால் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் பொதுமக்கள் சிரமப்படுவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில் கூட்டமைப்பினை சேர்ந்த ஓய்வு பெற்ற நில அளவையாளர் குருசாமி, ராஜேஷ் கண்ணா, பரமசிவம், சுதாகரன், சேதுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். மனுவினை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் மகாலட்சுமி ஏற்கனவே இது தொடர்பாக புகார் வந்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளதாகவும் உரிய அனுமதி பெறவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்


