தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2 புதிய பேருந்துகளின் சேவைகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2 புதிய பேருந்துகளின் சேவைகளை கொடியசைத்து துவக்கி வைத்தும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் ரூ.30 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புன்னைக்காயல் துணை சுகாதார நிலையத்தினையும் மீன்வளம் – மீனவர் நலன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் , மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலமாக தூத்துக்குடி மண்டலத்தில் 07 பணிமனைகள் மூலமாக 288 பேருந்துகள் இயக்கி பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறது. இதில் நாளொன்றுக்கு 183 புறநகர் பேருந்துகள், 105 நகர்ப்புற பேருந்துகள் மூலமாக 1,42,000 கி.மீ இயக்கப்பட்டு பயணிகள் பயனடைந்து வருகின்றனர். இன்றையதினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2 புதிய பேருந்துகளின் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புன்னைக்காயல் ஊராட்சியில் புன்னைக்காயல் – தூத்துக்குடி வழித்தடத்தில் 01 புதிய பேருந்து சேவையினையும், உடன்குடி பேருந்து நிலையத்தில் உடன்குடி – பெரியதாழை வழித்தடத்தில் 01 புதிய பேருந்து சேவையினையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், புன்னைக்காயலில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் ரூ.30 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, 2 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், 02 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூர் நகர்மன்ற துணைத்தலைவர் ஏ.பி.ரமேஷ், கோட்ட மேலாளர் வீ.ரமேஸன், வட்டார மருத்துவ அலுவலர், கிளை மேலாளர்கள், அரசு அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.


