கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் வைகாசி விசாக திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நேற்று வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 5 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடந்தது. காலை 7 மணியளவில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
காலை 10 மணியளவில் கழுகுமலை மற்றும் களப்பாளங்குளம், கரிசல்குளம், சம்பகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து மலையை சுற்றி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து 12 மணிக்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. உள்ளிட்ட திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இரவு 7 மணியளவில் வசந்த மண்டபத்தில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் முக்கிய வீதிகளில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


