ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அகழாய்வு பணிகள் நடந்தது. அந்த அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை அந்த இடத்திலேயே காட்சிப்படுத்தி அதன் மேல் தரமான கண்ணாடிகள் அமைக்கப்பட்டு சைட் மியூசியம் உருவாக்கப்பட்டது. இந்த சைட் மியூசியத்தை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
தற்போது இந்த சைட் மியூசியத்தை பார்வையிட பல்வேறு பகுதிகளில் இருந்து தினம்தோறும் ஏராளமானோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
ஆனால் இந்த சைட் மியூசியம் அருகே மிகவும் சேதமடைந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ளே உள்ள இரும்பு கம்பிகள் தெரியும் அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது. மேலும் காற்று அடித்தால் சாய்ந்து விழும் அபாய நிலையும் உள்ளது.
எனவே சேதமடைந்த நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


