திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாக திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது.
இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். மேலும் நேற்றைய தினம் வந்த பக்தர்கள் இன்று அதிகாலை கோவில் முன்புள்ள கடலில் நீராடி குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வைகாசி விசாக திருவிழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வருகை தந்தார். அவர் கடற்கரை பகுதி, பக்தர்கள் வரிசையில் நிற்கும் இடங்களை ஆய்வு செய்து அங்குள்ள காவலர்களிடம் பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து புதியதலைமுறை செய்தியாளரிடம் பேசுகையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பாதை யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு 6 இடங்களில் சோதனை சாவடி அமைத்து சாலையோரம் நடந்து செல்லுமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை எந்த குற்ற சம்பவங்களும் நடைபெறவில்லை. வருகின்ற கும்பாபிஷேக விழாவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திட்டமிட்டு வருகிறோம். கோவிலில் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிந்த பிறகு அதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.


