திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வைகாசி விசாகம் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஆண்டு தோறும் இங்கு பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில் முருகப் பெருமான் அவதரித்த நாளாக கருதப்படும் வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திர நாள் சிறப்பு வாய்ந்தது. இந்நாளையே வைகாசி விசாகம் என்ற பெயரில் முருக பக்தர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக நாளில் முருக பக்தர்கள் விரதமிருந்து தமிழகத்தின் நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தருவார்கள். மேலும் சில பக்தர்கள் அலகு குத்தியும், பால் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி, போன்ற பல்வேறு காவடிகள் எடுத்தும் பால்குடம் எடுத்தும் பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து வந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவர்.
இந்த ஆண்டிற்கான வைகாசி விசாக திருவிழா இன்று நடைபெறுவதை ஒட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்து வருகிறது.
வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடி அருகே உள்ள நாழிக்கிணற்றில் குளித்து விட்டு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்வதற்காக அதிகாலை 1 மணிக்கு முன்பாகவே காத்திருந்து முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக 100 கட்டண தரிசனம், முதியோர்களுக்கான தரிசன வரிசை மற்றும் பொது தரிசன வரிசையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
தற்போது கோவிலில் பெருந்திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருவதால் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
விழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் அடிப்படை வசதிக்காக மூவர் சமாது, வள்ளி குகை மற்றும் கோயில் வளாகப் பகுதிகளின் பல்வேறு இடங்களில் தற்காலிக குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நிரந்தர கழிவறைகளோடு, 60 தற்காலிக கழிவறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி தலைமையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த காவல் துறையினர் 600 பேரும் குற்றங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க குற்ற தடுப்பு பிரிவு காவல் துறையினர் 25 பேர் ஆங்காங்கே ரோந்து பணியில் மொத்தம் 625 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக 14,500 சதுர அடி நிரந்தர கொட்டகையும், 8 ஆயிரம் சதுர அடியில் தற்காலிக கொட்டகையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக தீயணைப்பு மீட்பு சேவைகள், மருத்துவ முகாம்கள், கடல் பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்து வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


