தூத்துக்குடியில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு ஈத்கா தோட்டத்தில் உலக அமைதி வேண்டி நடந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
இறைதூதர் இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுவது தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை ஆகும் ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள ஈத்கா தோட்டத்தில் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அலிம், தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து ஜாமியா பள்ளிவாசல் இமாம் சதக்கத்துல்லா அன்பு சகோதரத்துவம் உலக அமைதி வேண்டியும் பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தம் வேண்டியும் காசா மக்கள் நலம் வேண்டியும் சிறப்பு துவா செய்தார். தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாள் குறித்து தமிழ்நாடு ஜமாத் உலமா சபை பொருளாளரும் தூத்துக்குடி மாவட்ட அரசு காஜியுமான முஜிபுர் ரகுமான் பேசினார். தொழுகைக்குப் பின் ஒருவருக்கு ஒருவர் ஆறத் தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மிராசா மறைக்கார், துணைத்தலைவர் சாகுல் சிராஜுதீன், செயலாளர் எம் எஸ் எஃப் ரகுமான், பொருளாளர் மூஸா, கிரசன்ட் பள்ளி செயலாளர் முகமது உவைஸ், முஸ்லிம் சமுதாய சங்கத் தலைவர் ஏ.கே. மைதீன், அரபிக் கல்லூரி நிர்வாக சபை தலைவர் நவரங் சகாப்தின், அமீர் பில்டர்ஸ் காதர், அரபி, சமூக ஆர்வலர்கள் கிதர் பிஸ்மி, ஜாசி பில்டர்ஸ் சாகிர் உசேன், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று ஆடுகளை பலியிட்டு குருபானி வழங்கினர். இதில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு தர்மம் செய்கின்றனர்.


